Adv. Shayira Banu
Adv. Shayira Banu

திருமணம் எளிமையாக இருக்கட்டும்… வாழ்க்கை அழகாக இருக்கட்டும்…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் குடும்பநல நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகளை கையாளும் ஒருவராகவும், என்னை மிகவும் வேதனைப்படுத்தும் ஒரு காட்சி அடிக்கடி என் கண்முன் நிகழ்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அதே திருமணம், சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளோ முறிந்து, அதே மணமக்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசலில் நிற்பதை பார்க்கிறேன்.

அப்போது அவர்களின் முகத்தில் திருமண நாளில் இருந்த சிரிப்பு இருப்பதில்லை. கண்களில் கனவுகள் இருப்பதில்லை. இரு குடும்பங்களின் மனதிலும் மகிழ்ச்சி இருப்பதில்லை. இருப்பது வேதனை, ஏமாற்றம், பொருளாதார சுமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே.
என்னை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்துவது என்னவென்றால், திருமணத்திற்காக வாங்கப்பட்ட கடன்கள் அப்போது கூட முடிவடையாமல் இருப்பதுதான்.

• வங்கி கடன்கள் இருக்கும்.
• நகைகள் அடமானத்தில் இருக்கும்.
• தனியார் வட்டிக் கடன்கள் இருக்கும்.
• உறவினர்களிடம் வாங்கிய பணம் திருப்பிக் கொடுக்கப்படாமல் இருக்கும்.
• சேமித்து வைத்திருந்த வாழ்க்கை முழுவதின் சேமிப்பும் காலியாகி இருக்கும்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்க வேண்டிய நாளே, பல குடும்பங்களுக்கு கடன் வாழ்க்கையின் தொடக்க நாளாக மாறிவிடுகிறது. அதன் பிறகுதான் விவாகரத்து வழக்கு தொடங்குகிறது.

அப்போது நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தனது கடமையைச் செய்கிறது. யாருக்கு என்ன உரிமை இருக்கிறது, யாருடைய வருமானம் என்ன, யாருக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும், நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா, குழந்தைகளின் எதிர்காலம் எப்படி பாதுகாக்கப்படும் என்பதையெல்லாம் சட்டத்தின் அடிப்படையில் ஆராய்கிறது.
ஆனால் எந்த நீதிமன்றத்தாலும் உடைந்த உறவை எல்லா நேரங்களிலும் மீண்டும் உருவாக்க முடியாது.

திருமணத்திற்காக வீணாகச் செலவழிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வர முடியாது.
வட்டிக்கு வட்டி சேர்ந்து பெருகிய கடன்களை அழித்துவிட முடியாது. பல பெண்கள், திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, சட்டப்படி கிடைக்கும் பராமரிப்புத் தொகையையோ, நிரந்தர ஜீவனாம்சத்தையோ, அல்லது பரஸ்பர சமரசத் தொகையையோ நம்பியே வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பல நேரங்களில், திருமணத்திற்காக இரு குடும்பங்களும் செய்த அளவுக்கு மீறிய செலவுகளுடன் ஒப்பிடும்போது, அந்தப் பணம் அவர்களின் வாழ்க்கையை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப போதுமானதாக இருப்பதில்லை. அதேபோல், பல ஆண்கள் அந்தச் சட்டப்பூர்வமான நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற மீண்டும் கடன் வாங்கவோ அல்லது சொத்துகளை விற்கவோ வேண்டிய நிலையை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலையை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கறிஞராக, ஒரு கேள்வியை நான் சமுதாயத்திடம் கேட்க விரும்புகிறேன்.

இந்த அளவுக்கு ஆடம்பரம் உண்மையில் யாருக்காக?

ஒரு காலத்தில் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேரும் புனிதமான நிகழ்வு.
இன்று அது சமூக வலைத்தளங்களில் அதிக பார்வைகள் பெறும் ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

• ரீல்ஸ் கலாச்சாரம்…
• திரைப்படங்களின் தாக்கம்…
• வடஇந்திய திருமண கலாச்சாரத்தின் தாக்கம்…
• திருமணத் துறையைச் சுற்றியுள்ள வணிகமயமாக்கல்…

இவை அனைத்தும் சேர்ந்து, திருமணத்தின் உண்மையான அர்த்தத்தை மெதுவாக மாற்றிவிட்டன.
இன்று ஒரு திருமணம் என்றாலே

• ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வேண்டும்.
• சினிமா தரத்தில் வீடியோ வேண்டும்.
• சேவ் தி டேட் படப்பிடிப்பு வேண்டும்.
• ட்ரோன் கேமரா வேண்டும்.
• மெஹந்தி விழா வேண்டும்.
• சங்கீத் இரவு வேண்டும்.
• ஹல்தி விழா வேண்டும்.
• பேச்சுலர் பார்ட்டி வேண்டும்.
• பிரம்மாண்ட மேடை வேண்டும்.
• ஆயிரக்கணக்கான மலர் அலங்காரங்கள் வேண்டும்.
• டிசைனர் உடைகள் வேண்டும்.
• திரைப்படக் காட்சிகளைப் போன்ற மணமக்கள் வருகை வேண்டும்.
• இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வேண்டும்.
• யூடியூப் வெட்டிங் ஃபிலிம் வேண்டும்.

இவற்றில் எது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால்

• இவற்றிற்காக கடன் வாங்குவது தவறு.
• பிள்ளைகளின் எதிர்கால சேமிப்பை காலி செய்வது தவறு.
• பெற்றோரின் முதிய வயது பாதுகாப்பை இழப்பது தவறு.
• ஒரு நாள் நிகழ்ச்சிக்காக பல ஆண்டுகள் வட்டிக் கடன் சுமப்பது தவறு.

இவை அனைத்திலும் மிக முக்கியமான உண்மை என்னவென்றால்…
இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுகூட எந்த மதத்திலும் கட்டாயமில்லை. எந்த இந்தியச் சட்டத்திலும் கட்டாயமில்லை. இந்து மதம் திருமணத்தை ஒரு புனித சம்ஸ்காரமாகக் கருதுகிறது. இஸ்லாம் திருமணத்தை எளிமையாக நடத்துவதே சிறந்தது என்று போதிக்கிறது. கிறிஸ்தவம் திருமணத்தை இறைவனுக்கு முன்பாக ஏற்படுத்தப்படும் புனித உடன்படிக்கையாகக் கருதுகிறது. மூன்று மதங்களிலும் முக்கியமானது உறவு. ஆடம்பரம் அல்ல.

சட்டமும் இதையே கூறுகிறது. Hindu Marriage Act, 1955, Special Marriage Act, 1954, Indian Christian Marriage Act, 1872 மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்டக் கொள்கைகள் அனைத்தும் திருமணம் எவ்வாறு சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் என்பதையே கூறுகின்றன. திருமணம் செல்லுபடியாக இருக்க வேண்டிய வயது என்ன. இருவரின் சம்மதம் இருக்கிறதா. சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா. பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா. இவையெல்லாம் சட்டம் பார்க்கிறது.

ஆனால் திருமண மேடை எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை. எத்தனை வகை விருந்து வைக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை. மெஹந்தி நடத்த வேண்டும். சங்கீத் நடத்த வேண்டும்.பேச்சுலர் பார்ட்டி நடத்த வேண்டும். கோடிக்கணக்கில் அலங்காரம் செய்ய வேண்டும். என்று எந்தச் சட்டமும் கூறவில்லை. திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டால் கூட நீதிமன்றம் திருமண நாளில் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்டு தீர்ப்பு வழங்குவதில்லை. கணவன் மனைவியின் வருமானம். அவர்களின் பொருளாதார நிலை. வாழ்க்கைத் தேவைகள். குழந்தைகளின் நலன். வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகள். இவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் முடிவு செய்கிறது.

Hindu Marriage Act, 1955-ன் Section 13 விவாகரத்திற்கான காரணங்களை வகுக்கிறது. Sections 24 மற்றும் 25 வழக்கு நடைபெறும் காலத்திற்கான பராமரிப்புத் தொகை மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன. Special Marriage Act, 1954-ன் Sections 36 மற்றும் 37 இதேபோன்ற பாதுகாப்புகளை வழங்குகின்றன. கிறிஸ்தவர்களுக்கு Indian Divorce Act, 1869 பொருந்துகிறது.

மேலும், பொருளாதார ரீதியாக தன்னைத் தானே பராமரிக்க முடியாத மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோருக்கு Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023-ன் Section 144-ன் கீழ் பராமரிப்புத் தொகை கோரும் உரிமையும் உள்ளது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டுமே பாதுகாக்கின்றன. மனிதர்களை. அவர்களின் உரிமைகளை. அவர்களின் வாழ்க்கையை. ஆடம்பரத்தை அல்ல.

எனவே, ஒரு வழக்கறிஞராக அல்ல, தினமும் உடைந்த குடும்பங்களை நேரில் பார்க்கும் ஒரு மனிதராக நான் சமூகத்திடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். திருமணத்தை ஆடம்பரமாக அல்ல, அர்த்தமுள்ளதாக நடத்துங்கள். ஒரு நாள் புகைப்படத்திற்காக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அடமானம் வைக்காதீர்கள். அந்தப் பணத்தை அவர்களுக்கான வீட்டிற்காக சேமியுங்கள்.

• அவர்களின் தொழிலுக்காக முதலீடு செய்யுங்கள்.
• அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக வைத்திருங்கள்.
• அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக தொடங்குவதற்கு பயன்படுத்துங்கள்.

திருமணம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. அது ஒரு ஆயுள் முழுவதும் தொடரும் பொறுப்பு.
எளிமையான திருமணம் என்பது செலவைக் குறைப்பது மட்டுமல்ல. அது குடும்பத்தை காப்பாற்றும் முடிவு. கடன் சுமையைத் தவிர்க்கும் முடிவு. மனநிம்மதியை பாதுகாக்கும் முடிவு. எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முடிவு. அன்பை ஆடம்பரத்தை விட உயர்வாக மதிக்கும் முடிவு.

சாய்ரா பானு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
9940470424

Article Reference: Facebook

#எளிமையானதிருமணம் #திருமணம் #திருமணவாழ்க்கை #திருமணசெலவு #திருமணகடன் #குடும்பம் #குடும்பநலன் #குடும்பவாழ்க்கை #வாழ்க்கை #மனநிம்மதி #பெண்கள்உரிமை #சட்டவிழிப்புணர்வு #சட்டஉரிமைகள் #விவாகரத்து #விவாகரத்துச்சட்டம் #பராமரிப்புத்தொகை #ஜீவனாம்சம் #குடும்பநீதிமன்றம் #சென்னைஉயர்நீதிமன்றம் #வழக்கறிஞர் #சமூகபொறுப்பு #சமூகசிந்தனை #திருமணவிழிப்புணர்வு #நிதிநிலை #கடன்சுமை #பெற்றோர் #குழந்தைகள்எதிர்காலம் #எதிர்காலசேமிப்பு #SimpleWedding #Marriage #MarriageAwareness #WeddingExpenses #FamilyCourt #DivorceLaw #LegalAwareness #WomensRights #FamilyLaw #TamilArticle #TamilNews #SocialAwareness #SairaBanu

Thamizh Bazaar Ad

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *